Mangalyam Thanthunanena

a free matrimonial blog for IYERS/IYENGARS AND ALL BRAHMINS INCLUDING TELUGU, KANNADA, MAHARASHTRA. OUR AIM IS TO HELP EACH OTHER IN FINDING SUITABLE MATCH FOR OUR LOVED ONES. PLEASE CONTACT DIRECTLY TO THE NUMBER GIVEN BY THE POSTS. WE DO NOT TAKE ANY RESPONSIBILITY AND WE REQUEST YOU TO VERIFY BEFORE PROCEEDING.

Sunday 12 June 2016

Matrimonial masala -Tamil

மாமி! இலை போடலாமா?

காட்சி – 1

பாட்டி : ஹலோ ! யார் பேசறேள்!

எதிர்முனை: நான் நங்கநல்லூர்லேந்து ராஜமணி ஐய்ர் பேசறேன். ஒங்க பொண் போட்டோவையும் ஜாதகத்தையும் கல்யாணமே வைபோகமே வெப்ஸைட்டுல பாத்தேன். ரொம்ப பிடிச்சிருந்த்து.

பாட்டி: பொண்ண உங்க புள்ளைக்குன்னா பிடிக்கணும்.

எதிர்முனை:என் புள்ளக்குத்தான் பிடிச்சிருக்கு.ஜாதகமும் பொருந்தி இருக்கு.

பாட்டி: பொருத்தம் எல்லாம் நாங்க பார்த்தப்புறம்  நிச்சயம் பண்ணிக்கலாம். சரி சரி ! நல்லநாளாப் பாத்து போன் பண்ணிருக்கேள். என் பொண்ணு வந்தா தகவலைச்  சொல்லிட்டு போன் பண்ணச் சொல்றேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி 2
சாரு உள்ளே வருதல்
பாட்டி:  சாரு, நீ  வெளியிலே போயிருக்கறச்சே போன் வந்தது.  நங்கநல்லூரிலிருந்து ராஜமணி ஐயர் பேசினார். நம்ப சுபா போட்டோவையும் ஜாதகத்தையும் பார்த்தாளாம். உன்னை பேச சொன்னா. நம்பர்  எழுதி வச்சிருக்கேன்.

சாரு:  சரிம்மா. 

போன் டயல் செய்தல்.
சாரு: ஹலோ நான் நுங்கம்பாக்கத்திலிருந்து சாருமதி ராமசந்திரன் பேசறேன். என் பொண்ணு ஜாதக விஷயமா பேச சொன்னேளாமே?

எதிர்முனை: ஆமாம் மாமி ........

சாரு: உங்க பையன் என்ன பண்றார்?

எதிர்முனை: CTS ல வேலை பண்றான்.

சாரு:  CTS லே  வேலையா? அப்போ US  போயிட்டு வந்திருக்கணுமே!

எதிர்முனை: இல்ல மாமி! இனிமேதான்!

சாரு: இனிமேதானா? எங்காத்துப்  பொண் TCS லே இருக்கா. இரண்டு தடவை London போயிட்டு வந்துட்டா.

எதிர்முனை: அப்படியா... கல்யாணம் ஆனதும் ரெண்டுபேருமா போயிட்டு வரட்டுமே!

சாரு: சரி......நீங்க  இருக்கறது  flat ஆ ? இல்லை independent houseஆ?  Flatதானா?  சரி நான் எங்காத்து மாமாவையும் பொண்ணையும் கலந்து பேசிட்டு கூப்பிடறேன்.

பாட்டி: ஏண்டி சாரு ? அவா பாலக்காடாமே ? அதை விசாரிச்சுட்டியா?

சாரு:  அம்மா  கொஞ்சம் பேசாமல் இரு. நம்ப சுபா வந்தவுடன்  டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் மிச்சத்தை விசாரிக்கலாம்.

சுபாவும் அப்பாவும் உள்ளே நுழைகிறார்கள்.
சாரு: ஏன்னா. நங்கநல்லூரில் இருந்து ஒரு  மாமா போன் பண்ணினார்.  நம்ப சுபா ஜாதகம் பொருந்தியிருக்காம்.  பையன் CTS ல வேல பாக்கறான்.  ஆனா இன்னும் ஒரு தடவை கூட  US போகலயாம். எப்படின்னா பார்க்கிறது ?

அப்பா :  நீ சொன்னா சரியாதான் இருக்கும் சாரு.

சாரு:  சுபா நீ என்னடி சொல்றே?

சுபா:  அம்மா நேக்கு தலையை வலிக்கிறது. முதல்லே  ஒரு டம்ளர் காபி கொடு.  சாயங்காலம்  ஆபீஸ் விட்டு வந்த்துமே வரனை பற்றி பேசறே. இந்த  மூணு வருஷத்தில்  பதினாறு பையன்களுக்கு மேலே  சீரியஸ் ஆக டிஸ்கஸ்  பண்ணியாச்சு. பாட்டி இதுல உன்னோடதுதான் மேஜர் ஷேர். எங்க கொஞ்சம் லிஸ்ட் பண்ணு..

பாட்டி: போது போகலைன்னா பாட்டி தலைய உருட்டாதே!  பாம்பே பையன் ஒருத்தன் வந்தான். அவன் ஃபாரினே போகலைன்னு தட்டிக் கழிச்சோம். டெல்லிப்புள்ளை ஒருத்தன் வந்தான். கண்ணுக்கு லக்ஷணமா இருந்தான்.

சாரு: அவனோட அப்பா அம்மா கூடவே இருப்பான்னுட்டான். உன்னை எப்படி அந்த மாப்பிள்ளக்குக் குடுக்கறது,

பாட்டி: கல்க்கத்தா மாப்பிள்ளையும் அக்ககா தங்கைகளோட பொறந்தவன். கமிட்டெட் பர்ஸன் அப்படீன்னு சொல்லி கல்தா குடுத்தோம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

சுபா: ஆக ஒரு பையனை கூட நீ கண்ணுல காட்டல.

சாரு:  என்னடி பண்றது? நம்ப expectationக்கு மேட்ச் ஆக ஒரு பையனுமே இருக்க மாட்டேன் என்கிறானே.

சுபா: சரி சரி காப்பியைக் கொண்டா.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி – மூன்று
சுபா உள்ளே வருகிறாள்.

சுபா: அம்மா! நான் இந்த weekend  Bangalore  போறேன்.  என் friend  ராதிகாவுக்கு கல்யாணம்.

சாரு:  அப்படியா? மாப்பிள்ளை எந்த ஊரு?

சுபா:  Coorg  பகுதியை சேர்ந்தவர்.

சாரு: என்ன? மலைஜாதி மாப்பிளையா?   அப்ப வேறெ community யா?
இவா north arcot இல்லியோ?

சுபா:  ஆமாம்மா love marriage.  மாப்பிள்ளைக்கு கூர்க்லே எக்கச்சக்க காபி தோட்டம்  இருக்கு.  பெரிய பணக்காரர். Face Book  மூலம் friend ஆகி இப்போ கல்யாணத்திலே முடிஞ்சுடுத்து.
சாரு: பரவாயில்லேயே  உன் friend  கெட்டிக்காரிதான். புளியங்கொம்பா பிடிச்சுட்டா. நோக்கு அந்த சாமர்த்தியமெல்லாம் போராது.
சுபா: அம்மா நான் ஒழுங்கா உன் பேச்சை கேட்கறது நோக்குப் பிடிக்கலையா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------

காட்சி நாலு.
அப்பா : சாரு அந்த குரோம்பேட்டை வரன் விஷயமா போன வாரம் ஒருத்தர் போன் பண்ணியிருந்தாரே!  அவர் பையனோட ஜாதகமும்  போட்டோவும்  அனுப்பிசிருக்கார்.  பையன் CA  முடிச்சிட்டு பெரிய கம்பனிலே வேலை பார்கிறான்.

சாரு:  எங்கே போட்டோவை காட்டுங்கோ.  என்னனா இது?.  பையனுக்கு இப்பவே முன் கொஞ்சம்வழுக்கையா இருக்கு. போகப்போக முழுக்க சொட்டை ஆயிடும்.
பாட்டி: herbal oil வாங்கித் தடவியே சம்பளத்தை காலி பண்ணிடுவான்.  இந்த பையன் வேண்டாண்டி சாரு!

சாரு: நானும் அதைத்தான் சொல்றேன்.

அப்பா:  நீ சொன்னா சரிதான் சாரு.

சுபா உள்ளே வருகிறாள்.

சுபா:  என்னம்மா ! அப்பா உனக்கு ஜால்ரா போட ஆரம்பிச்சுட்டாளா. என்ன விஷயம்?

சாரு: இல்லடி.  ஒரு  வரன் வந்தது. பையன் தலை சீக்கிரமே  சொட்டை ஆயிடும்ன்னு சொன்னேன்.

சுபா: அம்மா! வர வர என்னக் கேக்காம நீயே எல்லா பையனையும் reject  பண்றே.  போற போக்குலே  நானும் என் friend  ராதிகா மாதிரி தான் பையன் தேடணும் போலிருக்கு.

பாட்டி: அம்மாடி எதுலயும் தேடவேண்டாம். நோக்கு ஒருத்தன் இனி பொறக்கப் போறதில்ல. ஏற்கனவே பொறந்துட்டாண்டி.

காட்சி ஐந்து.
சாரு: அப்பாடி! ஒரு வழியா ஒரு வரனை பார்த்து சுபாவுக்கு நிச்சயம் பண்ணிட்டோம்.

பாட்டி :  என்ன சாரு?  பையன் கூடப் பொறந்த அக்கா ஏன் நிச்சயத்தார்த்ததுக்கு வரல்லே?

சாரு: அம்மா அவ அமெரிக்காவுலே  இருக்கா.  அதனாலே கல்யாணத்துக்குதான்  வர முடியும்னு  சொல்லிட்டா!

அப்பா:  ஏன் சாரு அவா பேசற மலையாளம் நம்ப பொண்ணுக்கு புரியுமா?

சாரு:  அதெல்லாம் ஒண்ணும் கவலையில்லேன்னா!  நம்ப பொண்ணு மாப்பிளையோட தனிக்குடித்தனம் தான் பண்ணப்போறா.  அவரோட அப்பாவும் அம்மாவும் தனியாதான் இருப்பா. எப்பவாவதுதான்  வருவாளாம்.  அதை நான் செக்  பண்ணிட்டுதான்  ஜாதகத்தை  ஜோசியர்கிட்டயே  எடுத்துண்டு போனேனாக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------

காட்சி  ஆறு

சாரு: ஒரு வழியா கல்யாணப்பத்திரிகை வேலை முடிஞ்சுது. கல்யான சத்திரத்துக்கும் அட்வான்ஸ் குடுத்தாச்சு. கேட்டர்ரரை கூப்பிட்டு மெனு சொல்லி அட்வான்ஸ் குடுக்கணும். அந்த சதீஷ் நம்பர் போடும்மா சுபா.
சுபா நம்பர் போடப்போகும் சமயம் ஃபோன் ஒலிக்க் சுபா ஃபோனை எடுக்கிறாள்

நான் ரகு பேசறேன். சாரு மாமியோட பேசணும்.

சாரு: என்னப்பா சொல்ற்? இப்பொதைக்கு ON SITE   இல்லையா? அப்பா அம்மா கூடத் தான் இருக்கணுமா? EMIபோக கைல வரதுல ஒரு போர்ஷன் அம்மா அப்பாவுக்குப்போக மீதியைத்தான் சுபாகிட்டக் குடுப்பியா? சரி உங்கப்பாவைக் கூப்பிடு!

சாரு தொடர்ந்து போனில் பேசுதல்;

சாரு:  அம்மா கல்யாணத்தை நிறுத்திட்டேம்மா!

பாட்டி: என்னடி இது இப்போ போய் இப்படி ஒரு குண்டத் தூக்கிப் போடற!.

சாரு: சுபாவோட சம்பாத்தியமும் சேர்ந்தாதான் அவன் கட்டற கடன்கள் எல்லாத்துக்கும் சரியா இருக்கும். அவா அப்பா அம்மாவுக்கு ஆகர செலவு, இதெல்லாம் டபுள் சாலரி இருந்தாத்தான் சாத்தியம். போராக்கொறைக்கு இப்போதைக்கு ON SITE வேற இல்லையாம். இந்த கும்பல்ல நம்ம பொண்னு எதுக்கு மாட்டிக்கணும். அதனாலதான் நிறுத்திட்டேன்.

பாட்டி: இதுவரைக்கும் எத்தனை பையன்கள சுபாவுக்குப் பாத்தோம். ஒண்ணொணுலயும் ஓவ்வொரு குறையைக் கண்டுபிடிச்சி தட்டிக் கழிச்சுட்டோம். நானும் ஒன்னோட சேர்ந்து அதுக்கெல்லாம் துணை போனேன். என் பொண்களுக்கு நடந்த சோகம் என் மனசை பாதிச்சது உண்மைதான். அதனால நான் சுபா கல்யாணத்துக்கு தடைபோட்டது, கண்டிஷன்ங்கற பேர்ல தள்ளிவிட்ட்து எல்லாமே உண்மைதான்!  இருந்தாலும் பல மாப்பிள்ளைகள் தட்டிப்போய் என் பேத்திக்கு நல்ல எடத்துல கல்யாணம் குதிர்ந்துடுத்துன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா அத இப்படி நிறுத்திட்டுக் கூத்தடிப்பேன்னு நான் நெனக்கவே இல்ல சாரு.

சாரு: அதுக்கென்னம்மா! சுபாவுக்கு நல்ல ஃபாரின் மாப்பிள்ளளையை பாக்கலாம்மா. ஏன்னா நீங்க என்ன சொல்றேள்.

அப்பா:  நீ சொன்னா சரியாதான் இருக்கும் சாரு.

சுபா: கோபமாக - அப்பா  இப்படி  நீங்க  ஜால்ரா போட்டு போட்டுதான் அம்மா இப்படி பண்றா. இன்னமும் ஃபாரின் மாப்பிள்ளை மோஹத்துல அலையறா. பாட்டி ஏதாவது பண்ணமாட்டியா?

சாரு கோபமாக உள்ளே செல்லுகிறாள். அப்பாவும் வழக்கம் போல் பின்னால் போகிறார்.

சமையல் அட்வான்ஸ் வாங்க சதீஷ் வருகை

சதீஷ் : சாரு மாமி இருக்காளா!

சதீஷை பாட்டி ஏற இறங்கப் பார்த்தல்

பாட்டி : நான் கல்யாண பொண்ணோட பாட்டி!

சதீஷ்: நமஸ்காரம் பாட்டி! உங்காத்துப் பொண் கல்யாணத்துக்கு  கேட்டரிங் நாந்தான். உங்கள கலந்துண்டு மெனுவை டிசைட் பண்ணிட்டு  அட்வான்ஸ் வாங்கிண்டு போலாம்னு வந்தேன்.

சுபா வருகை

சுபா: ஹல்லோ சதீஷ் ! நீங்க எங்க  இங்கே?

சதீஷ்: சுபா ! நீ எங்க இங்க? ரொம்ப நாளைக்கப்புறம் பாக்கரேன்!

சுபா: ஆமாம் சதீஷ். நாலஞ்சு வருஷம் முன்னால Inter College Competitionல மீட் பண்ணினோம். நீங்க ரொம்ப டாலெண்டெட்ஆ பர்ஃபார்ம் பண்ணி பரிசுகள் வாங்கினேளே! ஆமாம் அன்னிக்கு அப்புறம் CA  பண்ணப்போறதா சொன்னேள்1 முடிச்சுட்டேளா?

சுரேஷ்:   M COM  முடித்து CA படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அப்பா திடீரென்று காலமாயிட்டார். அதுனால CA பண்ணல.

சுபா: எப்படி இந்த உத்யோகத்துக்கு வந்தேள்?

சதீஷ்: அப்பா போன கையோட அவர் கையில் இருந்த கரண்டியை  நான் கையில் எடுத்துண்டுட்டேன்.   5 வருஷங்களா அப்பா பண்ணின marriage catering ஐ  சந்தோஷமாகவும்  வெற்றிகரமாகவும்  நட்த்திண்டிருக்கேன்.

சுபா:  உங்களுக்கு  கல்யாண ஆயிடுத்தோ?

சுரேஷ்:  அம்மா சொல்லிண்டேதான் இருக்கா! ஆனா சொந்த தொழில் ன்னாலே யாரும் பெண் கொடுக்க மாட்டேங்கறாளே! Loan வாங்கறதுக்கு வேணா IT return / business turnover காட்டினா  ஒத்துப்பா . ஆனா இந்த கணக்கெல்லாம் கல்யாண மார்க்கெட்லே tally ஆக மாட்டேங்கறதே!. கை நிறைய சம்பாத்தியம், சொந்த கிரஹம். நான் ஒரே புள்ளை.  இருந்தும் என்ன பிரயோஜனம்?

சுபா:! எனக்கு உங்கள பிடிச்சிருக்கு! உங்களுக்கு ஓகேன்னா கல்யாணத்தை வைச்சுக்கலாம்..

சதீஷ் : என்ன சுபா ? இப்படி திடீர்ன்னு கேட்ட? .....ஏன் பாட்டி என்னாச்சு?

பாட்டி: எல்லாம் விபரமா சொல்றேன். மொதல்ல நீ எஸ் சொல்லு!

சதீஷ் : எங்கம்மாகிட்ட சொல்லாம ......

பாட்டி: பேஷா சொல்லலாம்! நானே உன்னோட வரேன். உங்கம்மாகிட்டே பேசறேன்.

சாரு :  சுபா!. என்ன முடிவு இது.? எடுத்தேன் கவுத்தேன்னு?

சுபா: ஏம்மா!  சொந்த  தொழில் பண்றவா எல்லாம் மாப்ளையா உன் கண்ணுக்கு தெரியலையா?  கல்யாணம் பண்ணிவைக்கிற சாஸ்திரிகள்,  கேட்டரிங்  பண்றவா, ரியல் எஸ்டேட்லே  இருக்கறவா இவாள் எல்லாம் எந்த விதத்தில் குறைஞ்சு போயிட்டா! உன் எண்ணத்தை கொஞ்சம் மாத்திக்கோ.  சாப்ட்வேர் வேலை  செய்யறவா மட்டும் தான் மாப்பிள்ளைகள் இல்லை.

பாட்டி: இங்க பாரு சாரு. நீ ரொம்ப வசதியா இருக்கனும்னு, அன்னிக்கு நான் நினைச்சுருந்தா நோக்கு கல்யாணமே ஆயிருக்காது. வாக்கபடற எடத்துல பொண் சந்தோஷமா இருக்காளாங்கறது தான் முக்கியம். அந்த சந்தோஷம் இந்த பையனைப் பண்ணிண்டா நம்ம சுபாவுக்கு நிச்சயம் கிடைக்கும். இனிமேயாவது கொஞ்சம் ஒன்ன மாத்திக்கோ சாரு.
  
சுபா: Welldone பாட்டி சதீஷ்தான் எங்காத்துக்காரர். ஒருமாஸத்துக்கு  பதினஞ்சு  கல்யாணங்களுக்கு  மேலே கேட்டரிங் பண்றார். கை நிறைய சம்பாத்தியம், Flexible office hours. No US timing tension.  நான் சந்தோஷமாக இருப்பேன் பாட்டி! என்ன  சதீஷ் OK யா?

சதீஷ் :  பாட்டி! அம்மாகிட்ட விபரத்தை சொல்லிட்டு வரலாமா?

பாட்டி: இதோ கெளம்பிட்டேண்டா கொழந்தே!

சுபா: மகிழ்ச்சியுடன்  - Thank you, Satheesh

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.